சகோ.விஜய்

புத்தாண்டு இன்னும் ஒருசில நாட்களில் பிறக்கப்போகிறது. புத்தாண்டு எப்படியிருக்கும் என்று மீடியாக்கள் பிரபல ஜோதிடர்களைக் கொண்டு கணிக்க ஆரம்பித்து விட்டன. எதற்காக? தனது நேயர்களைக் கவர்ந்திழுக்கவே! இன்று உலகத்துக்கும் சபைக்கும் பெரிய வித்தியாசமில்லையல்லவா? ஆவிக்குரிய உலகிலும் 2011 எப்படியிருக்கும் என்பதை தேவனிடமிருந்தோ(!) அல்லது தேவதூதனிடமிருந்தோ(!) பெற்று விரைவில் நமக்கு அறிவிக்க இருக்கிறார்கள் அது எதற்க்கு? அதுவும் மக்களைக் கவர்ந்திழுக்கத்தான்.
இதைக் குறித்து எழுதவேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனாலும் என் ஜனங்கள் பெரேயா பட்டிணத்தார் போல வேதத்தை ஆராய்ந்து பார்க்கிறவர்களாயிராமல் அத்தேனே பட்டணத்தார் போல நவமான காரியங்களைச் கேட்கிறதில் ஆர்வமுடையவர்களாய் ஆகிவிட்டபடியால் அதைக் குறித்து எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும். நமது இந்த பெலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு தீர்க்கதரிசனம் என்ற பெயரில் வஞ்சித்து தங்களைப் பிரதானப்படுத்திக் காட்டிக்கொள்ளுபவர்களைக் குறித்து எச்சரிக்க வேண்டியதும் அவசியமானாதால் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
நான் யாரையும் குறிப்பிட்டுத் தாக்கவோ புண்படுத்தவோ விரும்பவில்லை. அது அவர்களது இருதயத்தையும் அவர்கள் ரசிகர்களின் பூப்போன்ற இருதயத்தையும் வெகுவாகப் பாதிக்கும். இங்கு நானே ஒரு வஞ்சிக்கும் தீர்க்கதரிசியாக வேடமிட்டு உங்கள் முன்பாக வர விரும்புகிறேன். எனது இந்தப் பாத்திரத்துக்குப் பெயர் Rev.Dr.பிலேயாம் என்பதாகும் இந்தப் பாத்திரத்தில் இனி உங்களை அடிக்கடி சந்திக்கவிருக்கிறேன். இதோ Rev.Dr.பிலேயாம் உங்கள் முன் தோன்றுகிறார்
2011 எப்படியிருக்கப் போகிறது????
இதோ 20,21,22,23,24 ஆம் நூற்றாண்டுகளின் மாபெரும் தீர்க்கதரிசி Rev.Dr.பிலேயாம் பல நாட்கள் ”உங்களுக்காக” உபவாசித்து தேவனிடத்தில் பெற்ற துல்லியமான தீர்க்கதரிசனத்தை உங்களுக்கு அறிவிக்கிறார்.
உலகம், இயற்கை:
- பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், பல எரிமலைகள் குமுறும், கடல் கொந்தளிக்கும், இந்தோனேஷியாவில் சில இடங்களில் பூகம்பம் ஏற்படும். பின்குறிப்பு: நீங்கள் மேற்கண்ட காரியங்களை வரும் ஆண்டில் எப்போது கேள்விப்பட்டாலும் மாபெரும் தீர்க்கதரிசி Rev.Dr.பிலேயாம் சொன்னது பலித்துவிட்டது என்று நினைவு கூற மறவாதிருங்கள்.
- உலக அரங்கில் ஒரு பிரபல அரசியல் தலைவர் இந்த ஆண்டு மரிப்பார். அதனால் பெரும் பரபரப்பு உண்டாகும். பின்குறிப்பு: எந்த நாட்டின் எந்தத் தலைவர் மரித்தாலும் அது இந்தத் ”தீர்க்க”தரிசனத்துக்குள் அடங்கும்.
- பல நாடுகளில் இனக்கலவரங்கள் ஏற்படும். அதையொட்டி தடியடிகளும் துப்பாக்கிச் சூடுகளும் நடக்கும். மேலும் எல்லா நாடுகளிலும் விலைவாசி கண்டபடி உயரும், பல முக்கிய அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். பின்குறிப்பு: நீங்கள் மேற்கண்ட காரியங்களை வரும் ஆண்டில் எப்போது கேள்விப்பட்டாலும் மாபெரும் தீர்க்கதரிசி Rev.Dr.பிலேயாம் சொன்னது பலித்துவிட்டது என்று நினைவு கூற மறவாதிருங்கள்.
- வானத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தோன்றும். அந்த மாற்றங்களால் பூமியிலும் சில மாறுதல்கள் ஏற்படும்.பின்குறிப்பு: நான் நாசா இணையதளத்தைப் பார்த்தெல்லாம் எதுவும் சொல்லலப்பா!
- H1N1 போன்ற வியாதிகள் மேலும் பரவும், அரசாங்கங்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும். பின்குறிப்பு: WHO என்ற பெயரில் ஒரு அமைப்பு இருப்பதோ அவர்களுக்கு ஒரு இணையதளம் இருப்பதோ எனக்கு தெரியவே தெரியாது.
இந்தியா:
- இவ்வாண்டு விலைவாசி உயரும், சில மாநிலங்களில் அரசியல் குழப்பங்கள் ஏற்படும், சில மாநில அரசுகள் கவிழும் நிலை ஏற்படும்.
- திருச்சபை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
- இந்தியா உலக அரங்கிலும், விண்வெளித் துறையிலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திக்காட்டும்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருக்கும். தொழில் துறைகளில் வளர்ச்சி ஏற்படும்.
- திருச்சபைகள் வளர்ந்து பெருகும், கர்த்தர் அநேக இளம் ஊழியர்களை எழுப்புவார்.
- சில இடங்களில் அவ்வபோது ஜாதி மோதல்கள் தலை தூக்கலாம் மற்றபடி சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
- அநேக விசுவாசப் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வாய்ப்புக் கிடைத்து அங்கே செட்டில் ஆவார்கள். திருமணமாகாத பல விசுவாசிகளுக்கு இவ்வாண்டில் திருமணம் நடக்கும்.
பிரியமானவர்களே!
இப்படி பொத்தாம் பொதுவாக அடித்துவிடுகிறதற்குப் பெயர் தீர்க்கதரிசனமா? இதைப் பெறுவதற்க்கு பலநாட்கள் உபவாசம் இருக்க வேண்டுமா? நன்றாக சாப்பிட்டுவிட்டு மத்தேயு 24 ஆம் அதிகாரத்தை வாசித்தாலே இதில் பலகாரியங்கள் புரிந்துவிடுமல்லவா? சரி உபவாசமிருந்து பெற்றாயிற்று, இந்த தீர்க்கதரிசனங்களால் கர்த்தருடைய சரீரமாகிய சபைக்கு என்ன பிரயோஜனம்? இதுவே நமது மில்லியன் டாலர் கேள்வி. மேற்கண்ட Rev.Dr.பிலேயாம் சொன்ன எந்த ஒரு முன்னுரைத்தலாலும்(!) சபைக்கு எந்தப் பிரயோஜனமுமில்லை. உலகம் முழுவதும் எல்லா வருடங்களிலும் நிகழும் சகஜமான நிகழ்வுகளை அலங்கார வார்த்தைகள் போட்டு கம்பீரமாக அறிவித்தால் அது தீர்க்கதரிசனமாகிவிடாது. புறமதத்தார் நம்மைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பார்கள்.
பொத்தாம் பொதுவாகச் சொல்லுவதற்க்குப் பெயர் தீர்க்கதரிசனமல்ல, Rev.Dr.பிலேயாம் மிகவும் தந்திரமாக “பல இடங்களில்”, “ஒரு முக்கியத் தலைவர்” இப்படி சொல்லுவதைக் கவனியுங்கள். பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும் என்று ஆண்டவர் மத்தேயு 24:7-இல் சொன்னது உண்மைதான். ஆனால் அவர் சொன்னது கடைசி காலத்தைக் குறித்தது அது பல நூற்றாண்டுகளை உள்ளடக்கியது எனவே ஒரு இடத்தைக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் Rev.Dr.பிலேயாம் வெறும் 365 நாட்களைக் குறித்துத்தானே சொல்கிறார். ஏன் எந்தெந்த இடங்கள் என்று சொல்லக்கூடாது (இந்தோனேஷியா தவிர அங்கு பூமி அதிர்ச்சி வழக்கமாக ஏற்படும் ஒரு காரியம்).
அவரிடம் பல இடங்களில் பூமி அதிர்ச்சி ஏற்படும் என்று சொல்லுவதற்கு இவ்வளவு தூரம் பிரயாணப்பட்டு வந்த தேவதூதன் இடங்களின் பெயரையும் சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் அந்த இடத்திலுள்ள விசுவாசிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நாம் ஏதாகிலும் நம்மால் இயன்ற உதவிகளைச் முன்னேற்பாடாகச் செய்யவும் அவர்களுக்காக பாரப்பட்டு ஜெபிக்கவும் முடியுமல்லவா?
அப்படியானால் தேவன் தமது பிள்ளைகளிடம் வருங்காரியங்களைக் குறித்துப் பேசவே மாட்டாரா?
வருங்காரியங்களைக் குறித்து எல்லாம் ஏற்கனவே வேதத்தில் எழுதியாகிவிட்டது இனி புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட இடத்தில் நிகழப்போகும் அசம்பாவிதங்களைக் குறித்து தன் பிள்ளைகளை எச்சரிக்கவும் செய்யலாம் ஆனால் யாருக்கு எப்படிப்பட்டவர்களுக்கு என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று. (அப் 11:27,28)
அகபு சொன்னது போலவே நடந்துவிட்டது. உடனே அந்தியோகியாவில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? வாவ், அகபு சூப்பர் தீர்க்கதரிசிப்பா!! என்று அவருக்கு மேடை போட்டுப் பாராட்டினார்களா? அல்லது தனது சொந்த ஜெபக்குறிப்புக்கள் அடங்கிய கவருடன் அவருக்கு காணிக்கை அனுப்பி வைத்து தங்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டார்களா? அவர்கள் என்ன செய்தார்கள் சகோதரனே சகோதரியே?
அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள். (அப் 11: 29,30)
இதுதான் அந்தியோகியாவில் இருந்த கிறிஸ்தவர்களுடன் தேவன் பேசக் காரணம். ஏனென்றால் அவர்கள் நம்மைவிட வித்தியாசமானவர்கள். சரி இப்போது Rev.Dr.பிலேயாம் இந்தோனேஷியாவில் பூகம்பம் வரும் என்று முன் அறிவித்துவிட்டார். இந்தோனேஷியாவிலுள்ள விசுவாசிகளுக்காகவும், ஏழை எளியவருக்காகவும், குழந்தைகளுக்காகவும் நாம் என்ன செய்யப் போகிறோம்??? ஒருவர் உண்மையிலேயே தீர்க்கதரிசனம் சொன்னால் கூட வெறும் பரவச அனுபவத்துக்காக மட்டுமே அதைப் பார்க்கும் கேட்கும் நம்முடன் பேச கர்த்தருக்கு என்ன இருக்கிறது???
உலக நிகழ்வுகளைக் குறித்து டமால் டுமீல் என்று போட்டுடைத்த Rev.Dr.பிலேயாம் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும் எல்லாம் இன்பமயமாகக் காட்சியளிக்கும் என்றெல்லாம் பம்முவதைப் பாருங்கள். காரணம் ஏதாகிலும் ஏறுக்கு மாறாகப் பேசிவிட்டால் உள்ளூர் அரசியல்வாதிகள் முதுகில் டின் கட்டிவிடுவார்கள் என்ற பயம்.
ஒரு முக்கிய அரசியல் தலைவர் மரிப்பார், ஜாதிக் கலவரம் உண்டாகும் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டு அது யாராக இருக்கும்? எந்தெந்த ஜாதிக்கிடையே சண்டை வரும் என்றெல்லாம் விவாதம் நடத்திக் கொண்டிருப்பதைவிட எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. என்று 1 தீமோ 2:1-3 சொல்லும் தேவ வார்த்தையின்படி எல்லோருக்காகவும் ஜெபித்து அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவது நல்லது.
யார் தீர்க்கதரிசி?
தீர்க்கதரிசி என்பவன் யார்? ஐவகை ஊழியத்தில் அவன் பிரதானமானவன் அல்ல. அப்போஸ்தலனே பிரதானமானவன். தீர்க்கதரிசி இரண்டாமானவனே!
தீர்க்கனின் வேலை என்ன? அவன் திறப்பிலே நின்று சுவரை அடைத்து ஜனங்களுக்காக பாரப்பட்டு கர்த்தரிடம் மன்றாடுபவன். சபைக்கு கண்ணாக இருந்து அது இடுக்கமான பாதையில்தான் நடக்கிறதா என்று அவ்வப்போது உறுதி செய்பவன். மணவாட்டி உலகத்தின் ஆசையால் தடம் மாறுவது கண்டால் தேவனுக்கு வாயாக மாறி தீப்பிழம்பைக் கொப்பளிப்பவன்.
தீர்க்கதரிசி ஆவிக்குரிய போலீஸ்க்காரன், நடு ஜாமப் பொழுதிலும் கண்ணுறங்காமல் அலங்கத்துக்கு மேலே நின்று எதிரி வருகிறானா என்று நோட்டமிடுகிறவன். தப்பான ஆவியோடும், தப்பான உபதேசத்தோடும் வரும் எந்தத் திருடனையும் வாசலிலேயே தயவு தாட்சிணியமின்றி தடுத்து நிறுத்தி அவன் கழுத்தில் ஆவியின் கத்தியை வைப்பவன். அவன் பேச்சிலே முரடன் உள்ளத்திலோ பாலகன். எல்லோராலும் வெறுக்கப்படுபவன் ஆனால் எல்லோரையும் நேசிப்பவன். சொந்த ஜனங்களால் புறக்கணிக்கப்படுபவன் ஆனால் சொந்த ஜனங்களுக்காக “ஆண்டவரே என்பெயரைக்கூட ஜீவபுத்தகத்திலிருந்து கிறுக்கிப் போடும், அவர்கள் மீது கிருபையாயிரும்!!” என்று மன்றாடுகிறவன்.
அவன் கையில் இயேசுவின் போதனை என்ற தூக்குநூல் இருக்கிறது, அதோடு இசைந்து வரும் எல்லோருக்கும் அவன் பங்காளி. அதைத்தவிர கோணல் மாணலான யாவற்றிற்கும் அவன் பகையாளி. கர்த்தருடைய சித்தத்தைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் அவன் குருடன். தேவனுடைய கலப்பற்ற சத்தியத்துக்காகவும், மணவாட்டியின் ஆவிக்குரிய தூய்மையைக் காக்கவும் யாருடனும் மோதத் தயங்க மாட்டான். தீர்க்கதரிசியின் அகராதியைத் திறந்தால் அங்கு நாம் காணும் முதலும் முக்கியமுமான வார்த்தை “நோ காம்ப்ரமைஸ்”.
தீர்க்கதரிசியின் பார்வை கழுகுப் பார்வை, போதகனுடைய கண்களுக்கு தப்பிய, மேய்பனுக்கு தண்ணிகாட்டிய எல்லா ஆவிக்குரிய வைரஸ்கள்கூட தீர்க்கனுடைய மைக்ரோஸ்கோப் கண்ணுக்கு சிக்கிவிடும். அவன் தீர்க்கமாக தரிசிப்பவனல்லவா?
தீர்க்கதரிசியைப் பேசச்சொன்னால் அவன் வாயிலிருந்து புறப்படும் முதல் வார்த்தை “மனந்திரும்பு” என்பதாகும். அவன் பேச்சும் மூச்சும் “ஆதி நிலை ஏகுதலே”. சபைக்குள் பாரம்பரியம் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் மதத்தின் கிரியைகளை சிண்டைப் பிடித்து இழுத்து காலால் எட்டி உதைத்து வெளியே துரத்துவான். அவனைப் பிடித்து கண்டதுண்டமாய் வெட்டிபோட்டால் கூட அவன் ஒவ்வொரு அங்கமும் ”தேவசித்தம் செய்யணுமே” என்றே துடிக்கும்.
இதனால்தான் இதனால்தான் இதனால்தான் தீர்க்கதரிசி மாத்திரம் சபையின் சரித்திரப் பயணத்தில் குறிவைத்துத் தாக்கபட்டான். புதிய ஏற்பாட்டு சபை வெளிச்சத்தில் ஆரம்பித்து பின்னர் ஒரு காரிருளான நீண்ட பயணத்தைக் கடந்து மீண்டும் ஒரு எழுப்புதல் வெளிச்சத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீண்ட காரிருளில் மீண்டுவந்த சபையைப் பார்த்தால் தீர்க்கதரிசியை மட்டும் காணோம். குறி சொல்லுகிறவன், தகடு எடுக்கிறவனெல்லாம் இன்று தன்னைத் தீர்க்கதரிசி என்கிறான். அதுமாத்திரமல்ல ஐவகை ஊழியம் அனைத்தும் இன்று மேய்ப்பனுக்குள் சங்கமிக்க தொடங்கியிருக்கிறது. கர்த்தாவே! இந்த நிலையை மாற்றும், தீர்க்கதரிசிகளை மறுபடியும் எங்களுக்கு எழுப்பித் தாரும்!!